✔️ மாலையணிந்த பின் சந்திக்கும் ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன் என்றும், சிறுமிகளை கொச்சி என்றும் அழைக்க வேண்டும்.
✔️ மலைக்கு யாத்திரை புறப்பட சில நாட்களுக்கு முன்னர் விரிவான முறையில் பஜனை, கூட்டு வழிபாடு, பூஜை முதலியன நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி உணவளிக்க வேண்டும்.
✔️ இருமுடிக்கட்டும் பூஜையை குருசாமி வீட்டிலோ, கோவிலிலோ நடத்தலாம். கணபதியை பிரார்த்தித்து பெற்றோரை வணங்கி, ஐயப்பன் நாமத்தை சொல்லிக்கொண்டே கட்டு நிறைக்க வேண்டும்.
✔️ யாத்திரை புறப்படும்போது ஐயப்பன்மார்கள் போய் வருகின்றேன் என்றோ, தன்னுடன் வரும் ஐயப்பன்மார்களை வசதியாக அழைத்து செல்வதாகவோ, தன்னுடன் தைரியமாக வரலாம் என்றோ கூறக்கூடாது.
✔️ யாத்திரை புறப்படும்போது இருமுடியை தலையில் தாங்கி, வீட்டு வாசலில் ஐயப்பனை பிரார்த்தித்துக்கொண்டு தேங்காயை உடைத்து விட்டு சரணம் சொல்லி, போய் வருகிறேன் என எதுவும் கூறாது திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும்.
✔️ யாத்திரை புறப்பட்டதில் இருந்து கன்னி சாமிமார்கள் இருமுடியை தாமாக ஏற்றிக்கொள்ளவோ, இறக்கவோ கூடாது. குருசாமியின் கையாலோ அல்லது பலமலை சாமியின் கையாலோ கொண்டு தான் அதை செய்ய வேண்டும்.
✔️ பம்பையில் நீராடி, மறைந்த முன்னோருக்கு பித்ருதர்ப்பணம் செய்யலாம். யாத்திரை முடிந்ததும் பிரசாதங்களை ஏந்தி வந்து, வீட்டு வாசலில் தேங்காய் உடைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பூஜை அறையில் பூஜை செய்து, கற்பூர ஆராத்தி காட்டி, இருமுடி அரிசியை பொங்கி எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.
✔️ விரதகாலத்தில் மாலை போட்ட சாமிமார்களின் வீடுகளை தவிர வேறெந்த வீட்டிலும் ஐயப்பன்மார்கள் உணவருந்தக்கூடாது.
✔️ மாலைபோட்ட சாமிமார்கள் அதிலும் கன்னிசாமிமார்கள் மிகவும் கண்டிப்பாக பெருவழிப்பாதையில் செல்ல வேண்டும்.
✔️ யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது அவர்கள் சொல்லும் மந்திரத்தை கூறி மாலையை கழற்றி, சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.
✔️ ஒரு ஐயப்ப பக்தர் மாலை அணிந்ததிலிருந்து அவர் கோயிலுக்கு சென்று திரும்பும் வரை வீட்டு வாசலில் தினமும் விளக்கேற்ற வேண்டும். அந்த விளக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது எரிய வேண்டும்.
✔️ பக்தர் கோயிலுக்கு சென்ற பிறகும் வீட்டில் உள்ளவர்கள் அந்த விளக்கை தினமும் ஏற்ற வேண்டும். கோயிலுக்கு சென்ற பக்தருக்கு அந்த ஜோதி வழி காட்டுவதாக ஐதீகம். வீட்டில் உள்ளவர்கள் தினமும் காலை மாலை வீட்டில் விளக்கேற்றி ஐயப்பனுக்கு பால், பழம், நைவேத்தியம் வைத்து 108 சரணம் கூறி வணங்க வேண்டும். பக்தர் திரும்பி வந்தவுடன் ஜோதி ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என முழங்கவேண்டும். அதன்பிறகே வீட்டிற்குள் செல்ல வேண்டும்.
✔️ ஐயனை தரிசிக்க 18 படிகளில் தான் ஏறி செல்லவேண்டும். தலையில் இருமுடிக்கட்டுடன் படியின் வலதுபுறம் தேங்காய் உடைத்து ஏறவேண்டும். தலையில் இருமுடி இல்லாமல் பந்தளராஜ பரம்பரையின் இன்றைய ராஜாவையும், திருவாபரணம் கொண்டு வருபவர்களையும் தவிர வேறு யாரும் ஏறமுடியாது.
– சரணம் ஐயப்பா –